Wednesday, February 9, 2011

தனிமை

தாயின் முகம்
பார்க்காததால் என்னவோ 
கருவறையிலே 
இருப்பது  போன்ற 
உணர்வு..
எப்போதும்...
தனிமை....


பலருக்கு தனிமை
கொடுமை...
எனக்கோ
இனிமை.... 


முன்பெல்லாம் எப்போதாவது கிடைக்கும்
தனிமைக்கு வருத்தப்படுவதுண்டு…
இப்போது தனிமை பழகிவிட்டதால்
எப்போதும் இனிமையாகவே இருக்கிறது…


எப்போதும்
என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என் தனிமை!














Saturday, February 5, 2011

ஸ்பெக்டரம் ஊழலும் துரோகப் பட்டியலும்!


மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்கத் தெரிந்த மாக்கள் என்றே நினைத்துவிட்டார், தமிழக முதல்வர் கருணாநிதி,
ஏழைகள் பயன்படுத்தும் அளவுக்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவா? விலை குறைந்தன் காரணம் இதுவே...
கடந்த 1999 ஆண்டில் தான் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில்நுட்ப வளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால், உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை.
விலை கொடுத்து அலைக்கற்றை உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற, நுகர்வோரிடம் நிமிடத்துக்கு அதிக கட்டணம் (In coming and out going ) வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், நாம் தான் வசதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்துக்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

செல்பேசி நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரிசெய்ய  அன்றைய அரசு ஒரு தொலைத் தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. அதன் விளைவாகவே நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

2010 செல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008-ல் 50  கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கபட்டுள்ளது.
தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை - வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் சேவையை தொடங்க வேண்டும். (இந்தக் குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்) டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.
நியாய கணக்கு...
இந்தியாவில் 60 கோடி பேர் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்துக்கு 40 பைசா கட்டணம். அப்படியென்றால், 15 x 0.40 = 6.0 ரூபாய், ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60  கோடி கைபேசிகள். 60x 6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்துக்கு 30 x 360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்துக்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008-ல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்படியெனில், குறைந்தபட்ச வருமானம் இன்று வரை ரூ. 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால், இரண்டு வருடத்துக்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்... இன்னும் என்னென்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள். அத்துடன், 15 நிமிடத்துக்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது, "INFINITIVE".
இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்க வேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொருவரும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்துக்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. எப்படி..?
விலைவாசி உயரும். பொருளாதாரம் சீர்குலையும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் இன்னும் ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம், குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள், இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும். 
துரோகம் - 1
உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.13,000 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள (உதாரணம் S.TEL  நிறுவனம் ரூ.13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200, 1300, 1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.
துரோகம் - 2
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.
துரோகம் - 3
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க, அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவை சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL" போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.
துரோகம் - 4 
MTNL, BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பரேடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்துக்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.
துரோகம்-5
தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.
துரோகம்-6
நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG, தொலைதொடர்பு துறை தொடர்பாக கைப்பற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட, நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு.. இப்படி அடுக்கடுக்காக ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.
துரோகம்-7
இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரசாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G-யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற நினைப்பு.
துரோகம்-8
நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.
துரோகம்-9
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.
துரோகம்-10
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் எண் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டுமின்றி, நோய்க் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.
இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுற்றி சுற்றி அடிக்கும். எப்படி?
ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள், அந்தப் பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று.
இது மட்டும் இல்லை. ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடைவெளியை குறைக்கத்தான் அரசு ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர்.
இலவசம் வாங்கும் மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிப் பணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால், உங்கள் வாழ்க்கை தரமும் மாறபோவதில்லை.

நன்றி : விகடன், வாசகர் கட்டுரை..

Wednesday, February 2, 2011

"மனித உறவுகள் மேம்பட..."

சமீபத்தில் படித்த புத்தகம் ஒன்றில், "மனித உறவுகள் மேம்பட...' என்ற தலைப்பில் கொடுத்திருந்த அறிவுரைகள் அற்புதம். இதோ அவை...
குடும்பத்திலும் சரி... அலுவலகத்திலும் சரி... மனித உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும், இதோ சில எளிய வழிகள்...
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.
* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள்.
*விட்டுக் கொடுங்கள். 
* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய், ஆசைப் படாதீர்கள்.
* எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
* அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
* மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய, இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
* பேச்சிலும், நடத்தையிலும் திமிர்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கு காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத 
மனிதனே இல்லை; அதுவே, உங்களுக்கு வெற்றியாக அமையும்.

Tuesday, February 1, 2011

எது வேண்டும் சொல் மனமே – 90/10 கொள்கை


நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் .
அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?
உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.
எப்படி? மேற்கொண்டு படியுங்கள் .
உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக:
ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ?
நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது . இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது . இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது . அந்த 90%  நாம்தான் தீர்மானிக்கிறோம்.
எப்படி?
நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில்அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம் .
டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும்.
இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்கட்டுப்படுத்த முடியும்.
இதோ ஓர் உதாரணம்:
காலைச் சிற்றுண்டியைக் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அருமை மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிடஅதிலிருந்த தேனீர் உங்கள் மீது கொட்டஅலுவலகம் செல்ல அணிந்திருந்த உங்களது சட்டை பாழ் .
நடந்த இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. இப்படி நடக்காமலிருக்க உங்களால் எதுவும் செய்திருக்க முடியாது.
ஆனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிக்கப் போவதுஇதனை எதிர் கொள்ள நீங்கள் எடுக்கப் போகும் முடிவுதான்.
நீங்கள் சபிப்பீர்கள்.
தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக அருமை மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பீர்கள்/ கண்டிப்பீர்கள்…
மகள் அழத் தொடங்குவாள்….
அடுத்ததாகதேனீக் கோப்பையை மேஜையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் கோபம் மனைவி மீது திரும்பும் .
அதனைத் தொடர்ந்து மனவியுடன் ஒரு சிறிய வாய்ச் சண்டை. கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள்.
மாடியிலிருந்து கீழே வந்ததும் நீங்கள் காணும் காட்சி:
உங்கள் அருமை மகள் அழுது கொண்டே சிற்றுண்டியை முடித்துபள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள் உங்கள் மகள் . மனைவியும் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் .
இன்று மகளைப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்கள் தலையில். காரில் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள். மகளைப் பள்ளியில் கொண்டு சேர்த்த பின்னர்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியும் .
அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டதால் சாலையின் வேக விதியை மீறி விரைவாகச்செல்கிறீர்கள்.
பதினைந்து நிமிட தாமதம்அதற்கும் மேல் சாலையின் வேக விதியை மீறியதற்காக ரூபாய்300 அபராதம் .
அப்பாடா என்று மகளைப் பள்ளியில் இறக்கிவிட, ” போய் வருகிறேன்” என்று கூடச் சொல்லாமல் அவள் பள்ளி வளாகத்திற்குள் ஓடிவிட்டாள் . அதிலொரு சிறிய மனச்சஞ்சலம் உங்களுக்கு .
இருபது நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கும் போதுதான் நினைவு வருகிறது, ” ஆகா! அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டோமே ” என்று.
உங்களின் அன்றைய தினத்தின் தொடக்கமே சற்றுக் கடுமையானதாகிவிட்டது. மேலும் அது அவ்வாறே தொடர்கிறது. எப்போது வீடு சென்றடைவோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது .
மாலையில் வீடு வந்தடைந்தவுடன் மனைவிமகளின் நெருக்கத்தில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.
ஏன்?
காரணம்காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான்.
இந்த நாள் இப்படி இனிமையில்லாத நாளானதன் காரணம்தான் என்ன?
அ) அந்த ஒரு கோப்பைத் தேனீரா ?
ஆ) தங்களின் அருமை மகளா?
இ) அபராதம் விதித்த அந்தப் போக்குவரத்துக் காவலரா?
ஈ) நீங்கள்தான் காரணமா ?
சரியான விடை: ” ஈ”. ஆமாம் நீங்களேதான் ஐயா !
அந்தத் தேனீர் சிந்தியதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் . நீங்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் ?
இதோ இப்படி:
தேனீர் உங்கள் மீது கொட்டுகிறது.
அருமை மகள் அழப் போகிறாள்.
நீங்கள் மிக அன்பான குரலில், ” பரவாயில்லைஅடுத்த முறை கவனமாக நடந்துகொள் அருமை மகளே !” என்று அவளைச் சமாதானப் படுத்துகிறீர்கள். உங்கள் மேல் சிந்திய தேனீரை முகம் கோணாமல் புன்முறுவலுடன் ஒரு டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து புதிய சட்டையையும் அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு நிதானமாக இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள் .
அங்கேஉங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே அருமை மகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதைக் கண்டு மகிழ்கிறீர்கள் !
வழக்கத்தை விட ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் முகமன்களைப் பரிமாறி அன்றைய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் . நீங்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதைக் கண்டு மேலதிகாரி பாராட்டுகிறார். மேலதிகாரியின் பாராட்டு கிடைத்த சந்தோஷத்தோடு மாலை வீடு வருகின்றீர்கள்.
மனைவியும் மகளும் வாசலில் மகிழ்ச்சியுடன் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கின்றீர்கள் . உங்கள் மனதில் மேலும் சந்தோஷம் களைகட்டுகின்றது!
வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?
இரண்டு விதமான தொடர் நிகழ்ச்சிகள்! இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன .
ஏன்?
காரணம்நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொண்ட விதம்தான்.
நடந்து முடிந்த சம்பவத்தின் முதல் 10% நிகழ்வினைக் கட்டுப்படுத்தவோ,மாற்றியமைக்கவோ உங்களால் முடியாது .
ஆனால் அதனைத் தொடர்ந்த மீதி 90% நிகழ்வினைத் தீர்மானித்தது நீங்கள்தான். அதாவது,நீங்கள் அந்த முதல் 10% சம்பவத்தை எதிர் கொண்ட விதம்தான்.
இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:
யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள் .
அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும்.
தவறான எதிர்கொள்ளலால் நீங்கள்நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் உங்களின் வேலையை இழக்கலாம் மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.
உங்கள் வாகனத்தை ஒருவர்சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?
பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா ?
உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?
பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா?
உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?.
90/10 கொள்கையை நினை விற் கொண்டுஅது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள்
உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத்தெரிவிக்கப்படுகிறது.
அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?.
மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள் . கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .
விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது .
அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோஅருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள்.
நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.
90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே!
இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள்.
அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்!
இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.
90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை !
மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்துஅதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும்சோதனைகளாலும்,பிரச்சனைகளாலும்மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் .
அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.
நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!
ஆங்கில மூலம் : ஸ்டீபன் கோவே.