Saturday, December 24, 2011

கிறிஸ்துமஸ் சிறப்பு கதை- பாலயேசுவின் அன்பு




யேசு தன் குழந்தைப் பருவத்தை நாசரேத்தில்தான் கழித்தார். பாலயேசு மற்றவர்களிடம் மிகவும் அன்புடன் பழகினாலும், அவனைக் கேலி செய்து அவமானப்படுத்துவதில் விருப்பம்கொண்ட சிலர் இருக்கத்தான் செய்தார்கள். சிலர் அவனைத் துன்புறுத்தினார்கள்.

ஒருநாள் பாலயேசு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது ரபேக்கா என்ற ஒரு பாட்டி, குப்பைகளைக் கூட்டி அள்ளி பாலயேசுவின் தலையில் கொட்டினார்கள். பாவம் பாலயேசு! அவன் மேலே பார்த்தான். அந்த ரபேக்கா பாட்டி, வீட்டின் மாடியிலிருந்து அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்தார்கள்.

பாலயேசு தலையைக் குனிந்துகொண்டான். வீட்டுக்குச் சென்று தன் அம்மா மரியாவிடம் அழுதபடியே சொன்னான்:

அம்மா இதைக் கேளம்மா
வெட்கக் கேடாய்ப் போனதம்மா!
குப்பை அள்ளி என்தலையில்
பாட்டி ரபேக்கா கொட்டினாரே!

தன் மகன் சொன்னதைக் கேட்டு மரியா துயருற்றார்கள். அவர்கள் பாலயேசுவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு ஆறுதல் சொன்னார்கள்:

அருமை மகனே அழாதே
மனதில் பகைமை கொள்ளாதே
பாட்டியைப் பார்த்தால் நீயும்தான்
ஆப்பிள் ஒன்றைக் கொடுத்திடுவாய்!

என்று சொன்ன மரியா ஒரு ஆப்பிளை எடுத்து பாலயேசுவிடம் கொடுத்தார்கள். மறுநாள் பாலயேசு, தன்னை அவமானப்படுத்திய ரபேக்கா பாட்டியை வழியிடையில் சந்தித்தான். அம்மா கொடுத்த ஆப்பிளை அந்தப் பாட்டியிடம் கொடுத்தான். தான் அவமானப்படுத்திய பையன், தன் மீது காட்டும் அன்பைக் கண்டு ரபேக்கா பாட்டி தலைகுனிந்தார்கள்.

மற்றொரு நாள் பாலயேசு, தனியே வழியில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஜுனன் என்ற பெயருடைய ஒரு சிறுவன், பாலயேசுவின் மீது அழுக்குத் தண்ணீரை எடுத்து ஊற்றினான். பாவம் பாலயேசு. அவன் அழுக்குத் தண்ணீரைத் துடைத்துக் கொண்டான். வீட்டுக்குச் சென்று அழுதபடியே தன் அம்மாவிடம் சொன்னான்:

அம்மா இதைக் கேளம்மா
வெட்கக் கேடாய்ப் போனதம்மா!
ஜுனன் அண்ணன் என்மீது
அழுக்கு நீரைக் கொட்டினாரே!

பாலயேசு சொன்னதைக் கேட்டு அம்மா மரியாவின் மனம் துடித்தது. அவர்கள் குழந்தை யேசுவின் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார்கள்:

அருமை மகனே அழாதே
மனதில் பகைமை கொள்ளாதே
ஜுனன் அண்ணனைப் பார்த்தாலே
அத்திப் பழங்கள் கொடுத்திடுவாய்!

பிறகு மரியா கொஞ்சம் அத்திப் பழங்களை பாலயேசுவிடம் கொடுத்தார்கள். மறுநாள், தன்னைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிற ஜுனன் அண்ணனை, கடைவீதியில் பார்த்தான் பாலயேசு. தன் பையிலிருந்து அத்திப் பழங்களை எடுத்து ஜுனன் அண்ணனிடம் கொடுத்தான். ஜுனன் ஆசையுடன் அந்த அத்திப் பழங்களை வாங்கித் தின்றான்.

சில நாட்கள் கடந்தன. பாலயேசு தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, ஜோனாதன் எனும் பெயருடைய ஒருவன் பாலயேசுவைக் கல்லால் அடித்தான். பாலயேசுவின் நெற்றியில் அடிபட்டு ரத்தம் பெருகியது. அவன் பரிதாபமாக அழுதுகொண்டே தன் வீட்டுக்கு ஓடினான். அழுகையை அடக்க முடியாமல் தேம்பிக்கொண்டே அம்மாவிடம் சொன்னான்:

அம்மா இதைக் கேளம்மா
வெட்கக் கேடாய்ப் போனதம்மா
கல்லால் அடித்தார் ஜோனாதன்
நெற்றியில் ரத்தம் ஒழுகுதம்மா!

அதைக் கேட்ட மரியாவும் கதறி அழுதார்கள். தன் மகனின் காயத்தைத் துடைத்து மருந்து வைத்துக் கட்டுப்போட்டார்கள். அவனை உச்சி முகர்ந்து முத்தமிட்டுச் சொன்னார்கள்:

அருமை மகனே அழாதே
மனதில் பகைமை கொள்ளாதே!
ஜோனா தனைப் பார்த்தாலே
திராட்சைப் பழங்கள் கொடுத்திடுவாய்

பிறகு சில திராட்சைக் கொத்துகளை மகனிடம் கொடுத்தார்கள்.

மறுநாள், வழியோரத்தில் நின்று தன்னைப் பழிக்கிற ஜோனாதனிடம் பாலயேசு திராட்சைப் பழக்கொத்துகளைக் கொடுத்தான். ஜோனாதன் ஆவலுடன் அந்தத் திராட்சைப் பழங்களைத் தின்னத் தொடங்கினான்.

ரபேக்கா பாட்டியும், ஜுனனும், ஜோனாதனும் பாலயேசுவைத் துன்புறுத்தியதையும், பாலயேசு அவர்களுக்கெல்லாம் அன்புடன் பழங்கள் கொடுத்ததையும் ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தார். அவர் பெயர் ஸீயோன். அவர் நல்லவர். அவர் ஒருநாள் பாலயேசுவிடம் கேட்டார்:

அவமதிக்கும் மனிதர்க் கெல்லாம்
அன்பளிக்கும் சிறுவனே
ஏன் இப்படிச் செய்கின்றாய்
என்பதை எனக்கும் சொல்வாயே!

அப்போது பாலயேசு சொன்னான்: என்னைத் துன்புறுத்துகின்றவர்களும், அவமதிக்கின்றவர்களும் அவர்களின் மனதில் உள்ள தீமையைத்தான் எனக்குத் தருகிறார்கள். ஆனால், நான் என் மனதில் உள்ள நன்மையை அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஒவ்வொருவரும் தன்னிடம் இருப்பதைத்தானே மற்றவர்களுக்குத் தர முடியும்?" பாலயேசு சொன்ன பதிலைக் கேட்டு, அவனை அள்ளி அணைத்துக் கொண்டார் ஸீயோன்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.....

(குறிப்பு: இக்கதை 'அன்பின் வெற்றி' என்ற நூலிருந்து எடுக்கப்பட்டது.)

Friday, December 9, 2011

நான் செய்த தவறு



சில தவறுகள் 
நம்மை பக்குவப்படுத்தும்
மீண்டும் அத்தவறை 
செய்யாமல் இருக்க 
எச்சரிக்கை செய்யும்..
ஆனால் 
எச்சரிக்கையாக 
இருந்தும் நான் 
செய்த தவறு
அவளின் மீது 
நான் கொண்ட காதல் தான்........