Thursday, March 22, 2012

அன்பின் வெற்றி




சியாட்டில் எனும் இடத்தில்சிறப்பு ஒலிம்பிக்ஸ்நடந்துகொண்டிருந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்காக (மாற்றுத் திறனாளிகளுக்காக) நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியைத்தான்சிறப்பு ஒலிம்பிக்ஸ்என்று சொல்வார்கள்.

அடுத்த போட்டியாக ஓட்டப் பந்தயம் நடைபெற இருக்கிறது. கலந்துகொள்ளும் சிறுவர்கள் தொடக்கக் கோட்டில் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள்  அத்தனை பேரும் மாற்றுத் திறனாளிகள்தான் என்று, பார்த்தாலே தெரிந்துவிடும். சிலர் உடல் குறைபாடு உள்ளவர்கள். சிலர் மூளை வளர்ச்சி குறைந்தவர்கள். அவர்களின் முகபாவமே அதைச் சொல்லும். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். தங்களைச் சுற்றிலும் கூடியிருந்த பார்வையாளர்களைப் பார்த்துக் கையசைத்தார்கள்.

போட்டி தொடங்குவதற்கான வெடியோசை கேட்டது. உடனே அந்த இடமே பரபரப்பானது. அந்த ஓட்டப் பந்தயத்தைப் பார்ப்பதற்காக கேலரிகளில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அத்தனை பேரும் கூச்சலிட்டும், கைதட்டியும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தத் தொடங்கினார்கள்.

போட்டியாளர்கள் ஓடத் தொடங்கினார்கள். பார்வையாளர்கள் அனைவரும் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆவலுடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆர்வத்தை அடக்க முடியாமல் சிலர் எழுந்து நின்று கத்தினார்கள். புகைப்படக்காரர்கள் பந்தயத்தைப் பட மெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று அந்தச் சம்பவம் நடந்தது. இப்படியொன்று நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களிலேயே மிகவும் குறைந்த வயதுடைய ஒரு பையன் ஓடுபாதையிலேயே விழுந்துவிட்டான். ஒரு கால் ஊனமுள்ள அவன் உருண்டு விழுந்தான் என்றாலும், அடுத்த நொடியே  எழுந்து ஓட முயற்சித்தான். ஆனால் அவனால் முடியவில்லை. மீண்டும் தடுமாறிக் கீழே விழுந்தான். விழுந்ததில் அவன் முகத்திலும் கைகளிலும் சிராய்ப்புகள் ஏற்பட்டன. சுற்றிலுமிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் இதைக் கண்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பொதுவாக ஓட்டப் பந்தயங்களில், இப்படி விழுவது நடக்கக் கூடியதுதான். ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போது, போட்டியாளர்களில் ஒருவர் தடுமாறி விழுந்துவிட்டால் மற்ற போட்டியாளர்கள் என்ன நினைப்பார்கள்? ‘ஆகா! ஒருவன் விழுந்துவிட்டான்! எனவே போட்டியில் ஒருவன் இல்லை. நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது!' என்று நினைத்துக்கொண்டு முன்பைவிட விரைவாக ஓடி ஜெயிக்கப் பார்ப்பார்கள். அப்படி வீழ்பவர்களைப் பார்வையாளர்களும் பொருட்படுத்த மாட்டார்கள்.

ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. மிக மிகவும் வியப்பிற்குரிய ஒரு விஷயம் நிகழ்ந்தது. தங்களில் ஒருவன் வீழ்ந்துவிட்டான் என்று அறிந்தவுடன் மற்ற போட்டியாளர்களும் தாங்கள் ஓடுவதை நிறுத்திவிட்டார்கள்! விழுந்து கிடக்கிற சிறுவனின் அருகே ஒவ்வொருவராகத் திரும்பி வரத் தொடங்கினார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அவனைத் தூக்கி நிற்க வைத்தார்கள். அவன் கைகால்களைத் துடைத்துவிட்டார்கள். ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட சிறுவர்களிலேயே மிகவும் மன வளர்ச்சி குன்றிய ஒரு  சிறுமி, விழுந்த சிறுவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.

அந்தச் சிறுவன் சற்று ஆசுவாசமடைந்தான். பிறகு அந்தப் பிள்ளைகள் அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மெதுவாக முடிவுக் கோட்டை நோக்கி ஓடத் தொடங்கினார்கள்.

அந்த அதிசயக் காட்சியைப் பார்த்த அத்தனைப் பார்வையாளர்களும் வியப்பால் ஸ்தம்பித்துப்போனார்கள்அடுத்த சில நொடிகளில் பார்வையாளர்கள் எல்லோரும் பலமாகக் கைதட்டினார்கள். கத்திக் கூச்சலிட்டு அந்தச் சிறுவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

போட்டி மனோபாவத்தைக் கைவிட்ட அந்தச் சிறுவர்கள், ஒருவர் கையை ஒருவர் அன்புடன் பற்றிக்கொண்டு மெதுவாக ஓடிவந்தனர். அனைவரும் ஒன்றாக முடிவுக் கோட்டைத் தொட்டனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வெற்றி!

சரியாக இந்தக் காட்சியைப் புகைப்படம் எடுக்க முடியாமல் புகைப்படக்காரர்கள் சிரமப்பட்டனர். ஏனென்றால் கேமரா வழியாக அவர்கள் பார்க்கும்போது அவர்களின் கண்ணீரே திரையாகி காட்சியை மறைத்தது. அவர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்கள் பலரும் இதைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினார்கள்.

ஆமாம்! பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய பாடமானது! இந்த உலகில் நல்ல  அறிவும் நல்ல உடல் நலமும் பெற்ற மிகப் பெரும்பாலானோர் தங்கள் வெற்றியை மட்டுமே பெரிதாக நினைத்து, அக்கம்பக்கம் பார்க்காமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா! ஆனால் இங்கே என்ன நடந்தது? பலவிதமான உடல் குறைபாடு உள்ளவர்களும், போதிய மன வளர்ச்சி இல்லாதவர்களும் தங்கள் வெற்றியைக்கூடப் புறக்கணித்துவிட்டு, தோற்றுப்போனவர்களையும் ஜெயிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்! நிறைந்த அன்புகொண்ட அவர்கள்தான் உண்மையான வெற்றி வீரர்கள் என்று உணர்ந்த பார்வையாளர்கள் மீண்டும் கைதட்டினார்கள். அந்த ஓசை, இதயங்கள் திறந்துகொண்ட ஓசை!

No comments: