Monday, November 14, 2011

காகங்களின் ஆசை




ஒரு காட்டின் ஆற்றங்கரையின் அருகே அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. ஆலமரத்தில் ஏராளமான காகங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள் அந்த மரத்தின் பக்கமாக மயில் ஒன்று பறந்து வந்தது. அந்த மயில் ஆலமரக் கிளையில் அமர்ந்ததும், காகங்கள் எல்லாம் மயிலை அதிசயமாகப் பார்த்தன. மயில் தோகையுடன் அழகாக இருக்கவே, தங்களுக்கும் தோகை எதுவும் இல்லையே என்று காகங்கள் வருத்தமடைந்தன. உடனே அந்த மயிலைச் சூழ்ந்து கொண்டன. மயிலே உன்னிடம் அழகான தோகை இருக்கிறதே! உன்னைப் போன்று எங்களுக்கு தோகை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்களுக்கும் தோகை கிடைக்க வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று காகங்கள் கேட்டன. மயிலோ அந்தக் காகங்களை எல்லாம் முட்டாள்களாக்க வேண்டும் என்று மனதுள் நினைத்தது

காகங்களே நீங்கள் என்னிடம் விரும்பிக் கேட்கிற காரணத்தால், நான் இந்தக் கதையினை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். காகங்களே! நான் மலை உச்சியில் உள்ள வேப்பமரத்தில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு இந்த தோகையில்லை. அப்போது மலையிடுக்கில் என்னைப் போன்ற மயில் ஒன்று வசித்து வந்தது. ஆனால், அதற்கு தோகையிருந்தது. நான் உடனே அந்த மயிலிடம் சென்று, நண்பனே! உனக்கு மட்டும் அழகிய தோகையிருக்கிறதே, எனக்கு அந்தத் தோகையில்லையே. அது எதனால்? என்று கேட்டேன். உடனே அந்த மயில் நீ எனக்கு மூன்று வேளையும் நேரம் தவறாமல் இரையினைச் சேகரித்துக் கொண்டு வந்தால் உனக்கு தோகை வளர்ந்து விடும் என்றது. உடனே நானும் தினமும் என் பசியை மறந்து அந்த மயிலுக்கு மூன்று வேளையும் இரை தேடிக் கொடுத்தேன். இப்படியே ஒரு மாதம் முடிவடைந்தன. அதன் பிறகு ஒருநாள் இரவு நேரம் நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். அதிகாலை நேரத்தில் நான் கண்விழித்துப் பார்த்த போது எனக்குப் பெரிய தோகை வளர்ந்திருப்பதைக் கண்டேன். உடனே மகிழ்ச்சியில் ஆடிப், பாடினேன் என்றது மயில். உடனே ஒரு காகம், மயிலே! நாங்களும் உனக்கு மூன்று வேளையும் இரை தேடித் தந்தால், ஒரு மாதத்திற்குப் பின்னர் எங்களுக்கும் தோகை வளர்ந்து விடுமல்லவா? என்று கேட்டது. அதிலென்ன சந்தேகம், உடனேயே தோகை வளர்ந்து விடும்! என்றது மயில். அதனைக் கேட்ட காகங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தன. மயிலின் பேச்சைக் கேட்ட காகங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இரை தேடச் சென்றன. இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலமாக காகங்கள் எல்லாம் தங்களின் பசியையே மறந்து, மயிலுக்கு மூன்று வேளையும் உணவுத் தேடிக் கொடுப்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தன. இதன் காரணமாக சில காகங்கள் சோர்வடைந்தன. இன்னும் சில காகங்கள் மயங்கி விழுந்தன.

ஆனால் மயிலோ அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாம் இந்தக் காகங்களை ஏமாற்றி ஒரு மாத காலம் உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்தபடி மூன்று வேளையும் உணவைத் தேடிக் கொண்டோம். இந்த முட்டாள் காகங்கள் நம் பேச்சை நம்பி ஏமாந்துவிட்டன! என்று மனதுக்குள் நினைத்தபடி மகிழ்ச்சியுடன் இருந்தது. அப்போது அந்தப் பக்கமாக வேடன் ஒருவன் வந்தான். அவன் மரத்தில் நின்று கொண்டிருக்கும் மயிலைப் பார்த்தான். நெடு நாட்களாகவே மயில் தோகை கிடைக்க வேண்டி முயற்சித்து வந்தான் அந்த வேடன். இப்போது தோகைகளுடன் கூடிய மயிலைப் பார்த்ததும் அதன் மீது அம்பினை எய்தான். அம்பு பட்ட மயிலும் பொத்தென்று தரையில் விழுந்தது. தரையில் விழுந்த மயிலை வேடன் தூக்கிச் சென்றான். உடனே மயில், காகங்களுக்கு நாம் செய்த துரோகத்திற்குத் தான், கடவுளால் நமக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.

நீதி: ஏமாற்ற நினைப்பவர்களுக்கு தண்டனை நிச்சயம்

குறிப்பு: இது குழந்தைகள் எழுதிய காம்போய் கதைகள் என்ற நூல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

5 comments:

வலிப்போக்கன் said...

ஏமாற்றும் மயிலுக்குதானா தண்டனை, இங்கு மனிதர்களை மனிதர்கள் ஏமாற்றுகின்றனரே தண்டனை என்பதே இல்லையே!

சி.பி.செந்தில்குமார் said...

ஏமாற்ற நினைப்பவர்களுக்கு தண்டனை நிச்சயம்
>>>
இது ”அவங்களுக்கான” பதிவில்லையே

rajamelaiyur said...

அருமையான கருத்து

PUTHIYATHENRAL said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்!! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்! please go to visit this link. thank you.

PUTHIYATHENRAL said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்!! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்! please go to visit this link. thank you.